மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு!
தூத்துக்குடி, 8 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி பகுதியில் நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த
Tuticorin School Head Master


தூத்துக்குடி, 8 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி பகுதியில் நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த நெல்சன் பொன்ராஜ் பணிபுரிந்து வருகிறார்.

நல்லாசிரியர் விருது பெற்ற இவர், ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியை டிஜிட்டல்மயமாக்கி மாணவர்களுக்கு கணினி கல்வியை கற்றுக் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்ல, தனது சொந்த செலவில் பல்வேறு புதிய கட்டடங்களையும் கட்டி மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தனது பள்ளியில் படிக்கும் 11 மாணவ, மாணவிகள், பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆறு பேர் என 17 பேரின் விமானத்தில் பயணம் செய்யும் ஆசையை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

முன்னதாக அரசு பள்ளி மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோரை பாராட்டினார்.

பின்னர் மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்,

விமானத்தில் பயணம் செய்வது அனைவருடைய கனவு, நானே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பின்பு தான் முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்தேன்.

தற்போது உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியரை பாராட்டுகிறேன். வருங்காலங்களில் இது போன்று நிகழ்வுகள் இன்னும் நடைபெற வேண்டும்” என்றார்.

பின்னர், அவர்கள் அனைவரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கிளம்பிச் சென்றனர்.

சென்னையில் அவர்கள், கன்னிமாரா நூலகம், அருங்காட்சியகம், தலைமைச் செயலகம், தலைவர்களின் சமாதிகள் ஆகியவற்றை பார்ப்பதுடன், மெட்ரோ ரயிலிலும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

பின்னர் மெட்ரோ ரயில் மூலமாக எழும்பூர் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து முத்து நகர் எக்ஸ்பிரஸ் மூலம் மீண்டும் தூத்துக்குடி திரும்புகின்றனர்.

இதற்காக தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் தனி ஆளாக சுமார் 1.50 லட்சம் செலவு செய்துள்ளார்.

அவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதே போல், தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், கடந்த மார்ச் 22 ஆம் தேதி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என 20 பேரை சென்னைக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN