Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 8 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இதில் ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும்.
இரண்டாவதாக மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடர்களில் பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. டிச.,1ம் தேதி முதல் 19ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிச.,1 முதல் டிச.,19ம் தேதி வரை நடத்துவது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்களாட்சியை வலுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அர்த்தமுள்ள அமர்வாக இது அமையும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் தீவிர திருத்தப் பணிகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b