Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 9 நவம்பர் (ஹி.ச.)
இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கம் - தமிழ்நாடு பிரிவு (AHPI-TN), அதன் சுகாதார மாநாடான AHPICON-ஐ கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தினர்.
நிலைத்தன்மையில் இருந்து விரிவாக்கம் வரை:
ஒவ்வொரு மருத்துவமனைத் தரத்தையும் வலுப்படுத்துதல்’ என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது.இந்த கருப்பொருள், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய மருத்துவமனைகள் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்வதைத் தாண்டி, திறமையாகவும் பொறுப்புடனும் விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நிதி ஒழுக்கம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி அனைத்து மட்ட சுகாதாரப் பராமரிப்பு மையங்களுக்கும் அதிகாரம் அளிப்பதை இது வலியுறுத்துகிறது.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் 5 மண்டலங்களிலிருந்தும் இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரபல தொழிலதிபர் டாக்டர். ஜெயராம் வரதராஜ் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
டாக்டர். ராஜசேகரன், தலைவர் - எலும்பியல் துறை, கங்கா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனைகள் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்திய சுகாதார சேவை வழங்குநர்கள் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். கிரிதர் க்யானி, மற்றும் இந்த சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர். அலெக்சாண்டர் தாமஸ் சிறப்பு உரை வழங்கினர். இந்த மாநாட்டில் பல ஆழமான பேச்சாளர் அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் இடம்பெற்றன.
தொடக்க அமர்வின்போது, இந்த சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். கிரிதர் க்யானி, மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையேயான சவால்கள் நிறைந்த உறவு பற்றி பேசினார்.
நோயாளிகள், மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு சேவை வழங்குநர்களுக்கு என இந்த மூன்று தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் ஒரு சூழலை உருவாக்க, சுகாதார வழங்குநர்களும் காப்பீட்டாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். அலெக்சாண்டர் தாமஸ் , சுகாதார நிறுவனங்களில் தரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். நவீன சுகாதாரச் சூழலில், உயர் தரத்தை அடைவது ஒரு இலக்காக மட்டும் இருக்காமல், ஒரு மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் நீடித்த நிலைத்தன்மைக்கான அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் மருத்துவமனைகள் நோயாளியின் திருப்தியை மேம்படுத்தி, நேர்மறையான பரிந்துரைகள் மூலம் சந்தைப் பங்கை அதிகரிக்கின்றன என்று அவர் விளக்கினார்.
இந்த சங்கத்தின் தமிழகப் பிரிவு தலைவர் மற்றும் தேவதாஸ் மருத்துவமனை இணைத் தலைவர் டாக்டர். சதீஷ் தேவதாஸ் அவர்கள் மருத்துவமனைகளுக்கான நீடித்த நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றிப் பேசினார்.
சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவது செயல்பாட்டுச் செலவுகளை வெகுவாகக் குறைத்து, புத்தாக்கம் மற்றும் விரிவாக்கத்திற்கான நிலையான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தரும் என்றார்.
இந்த சேமிப்பு, மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய அவசியம் என்றும், ஒரு மருத்துவமனையின் நீடித்த நிலைத்தன்மை குறித்த அர்ப்பணிப்பு சமூகத்தின் மத்தியில் மருத்துவமனையின் நற்பெயரை மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan