Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையின் மனநிலையை பாதிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது.
மக்களை விளையாட்டாக ஆக்குவதற்காக சிலரின் தனியுரிமை, உணர்ச்சி, குடும்ப உறவுகள் அனைத்தையும் பொது வெளியில் வெளிப்படுத்துவது சமூக நாகரிகத்துக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
அவரது அறிவிப்பின் பேரில், வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணி இன்று சென்னை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்துகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே கோரிக்கை.
பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும் இந்த போராட்டத்தில், “குடும்ப மதிப்புகளை காப்போம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்க என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
போராட்டம் தீவிரமாகும் வாய்ப்புள்ளதால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும், போராட்டம் நடைபெறும் பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம்-சமாதானம் குலையாதபடி காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் “பிக் பாஸ் நிகழ்ச்சி விதிமுறைகளுக்குள் தான் நடைபெறுகிறது. எதுவும் அநாகரீகமாக ஒளிபரப்பப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூக வலைத்தளங்களில் இதற்கான எதிர்ப்பும் ஆதரவுமாக இரு பக்கங்களிலும் கருத்து மோதல் நீடிக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிரான இந்த போராட்டம் எதிர்வரும் நாட்களில் மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்கு எதிராக உள்ள நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN