தருமை ஆதீன மணி விழாவில் ஈஷாவுடன் இணைந்து துவங்கப்பட்ட கோவில் காடுகள் திட்டம்
மயிலாடுதுறை, 9 நவம்பர் (ஹி.ச.) தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும் ஆன்மீக அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் செயல்படுத்தவுள்
The Kovil Kaadugal (Temple Forests) project was launched jointly with Esha during the Tharumai Adheen Mani festival.


The Kovil Kaadugal (Temple Forests) project was launched jointly with Esha during the Tharumai Adheen Mani festival.


மயிலாடுதுறை, 9 நவம்பர் (ஹி.ச.)

தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும் ஆன்மீக அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் செயல்படுத்தவுள்ள கோவில் காடுகள் திட்டத்தின் துவக்க விழா வள்ளாலகரம் வதாரண்யேசுவரர் கோவிலில் நேற்று (07/11/2025) நடைபெற்றது.

இதில் முதல் மரக்கன்றை தருமை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் தவத்திரு சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் நட்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது தருமை ஆதீனத்தின் நிர்வாகி பாலாஜி பாபு, ஈஷா யோக மையத்தைச் சேர்ந்த சன்னியாசிகள் சுவாமிகள் அலோகா, கைலாசா மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து தருமபுரம் ஆதீனத்தின் இளைய சந்நிதானம் சிவகுருநாத தம்பிரான் பேசுகையில்,

“ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் இணைந்து, ஒவ்வொரு கோவில்களிலும் 1000 மரக்கன்றுகள் என ஆதீனத்திற்கு உட்பட்ட 60 கோவில்களில் நடப்பட்டு கோவில் காடுகள் உருவாக்கும் பணி இங்கு துவக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

நம் வழிபாட்டில் மரம் என்பது இறைவனாகவே பார்க்கப்படுகிறது. மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்று சொல்லும்போது, ஒவ்வொரு தலத்திற்கும் தல விருட்சம் உண்டு. ஒவ்வொரு கோயிலிலும் இறைவன் மரத்தின் வடிவமாகவே இருக்கிறார் என்பது சைவ சமயத்தின் மற்றும் இந்தியப் பண்பாட்டின் நம்பிக்கை. அப்படிப்பட்ட மரங்களை நாம் நிறைய வளர்ப்பதன் மூலம் மழை பொழிந்து இயற்கை காக்கப்படும் என்ற உன்னத நோக்கிலேயே நம் முன்னோர்கள் கோவில் காடுகள், தல விருட்சம் போன்றவற்றை உருவாக்கி இருந்தனர்.

இதனை உணர்ந்து, ஈஷா யோகா மையமும் நமது ஆதீனமும் சேர்ந்து, குருமகா சந்நிதானத்தின் 60-ஆவது ஆண்டு நிறைவு மணிவிழாவில் கோவில் காடுகள் திட்டத்தை நிகழ்த்துவது மகிழ்ச்சிக்குரியது. இது தொடர்ந்து நாடெங்கும் நிறைய நடந்து, இம் மண்ணில் வளமும் நலமும் பெருக, எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். எனக் கூறினார்.

கோவில் காடுகள் திட்டம் குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில்,

விவசாயிகளின் பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும் நோக்கில் சத்குரு காவேரி கூக்குரல் இயக்கத்தினை துவக்கினார்.

இவ்வியக்கம் மூலம் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுத்து, விவசாய நிலங்களில் மரங்களை நட்டு வருகிறோம்.

இதற்கு அடுத்தபடியாக ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தையும், கோவில் காடுகள் திட்டத்தினையும் ஆன்மீக அமைப்புகளின் ஆதரவோடு முன்னெடுத்து உள்ளோம். கோவில் காடுகள் திட்டத்தின் தலையாய நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு குறுங்காடு இருக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக, தருமபுர குருமகா சந்நிதானம் ஆதீன நிலங்களில் கோவில் காடுகளை உருவாக்க வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இதற்கு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பருவநிலை மாற்றத்தால் அதிக வெப்பம், அதிக மழை போன்ற சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. நம்முடைய முன்னோர்கள் இதை உணர்ந்துதான், கோவில் காடுகளை அமைத்தனர். மரத்தை வெட்டக் கூடாது என்பதற்காகவே, அங்கு ஒரு தெய்வச்சிலையை நிறுவி, அதை வழிபாட்டுத் தலமாக மாற்றினர்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 12,000-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் முன்பு கோவில் காடுகள் இருந்தன. இதுதான் தமிழகத்தில் பருவநிலையைச் சீராகப் பேணி வந்தது. மழை மறைவுப் பகுதியாக தமிழ்நாடு இருந்தாலும், 1000 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், மாதம் மும்மாரி மழை பெய்ததா என்றுதான் முதல் கேள்வியைக் கேட்டனர். அப்போது அவ்வளவு காடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தன. ஆனால், நம்முடைய சுய தேவைக்காக இந்தக் காடுகளை நாம் அழித்துவிட்டோம். அவற்றை மீண்டும் உருவாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

இந்த இயக்கத்தில் எல்லா ஆதீனங்களும், ஆன்மீக அமைப்புகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் காட்டை உருவாக்கி, அதனை மண்ணுக்கான மரங்களின் விதைக் கிடங்காக உருவாக்க வேண்டும். இலுப்பூர், கடம்பூர் என மரங்களின் பெயரிலேயே பல ஊர்கள் தமிழகத்தில் இருந்தன. ஆனால், இன்று மரங்கள் இல்லை. அதை மீட்டுருவாக்கம் செய்வதே நம்முடைய இலக்கு. இது சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த திட்டத்தில் அந்தந்த பகுதிகளில் மண் மற்றும் நீரின் தன்மையை ஆய்வு செய்து, மண்ணுக்கேற்ற நாட்டு மரங்களை காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கும். மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சி காலம் முழுமையும் தொடர்ந்த ஆலோசனைகளையும் வழங்கும் எனக் கூறினார்.

Hindusthan Samachar / V.srini Vasan