Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 9 நவம்பர் (H.S.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து வழிபாடு செய்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும், திரை பிரபலங்களும், அரசியல் முக்கிய பிரமுகர்களும் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காலை 5.30 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகாலை முதல் பொது தரிசனத்தில் ராஜகோபுரம் வழியாக சென்று வழிபடும் பக்தர்களும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சென்று 50 ரூபாய் கட்டண தரிசனம் செய்யும் பக்தர்களும் 2 கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து 7 மணி நேரத்திற்குப் பிறகு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை வழிபட்டு திருமஞ்சனம் கோபுர வழியாக வெளியே செல்கின்றனர்.
பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN