Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 9 நவம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியும், கொந்தாமூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தங்களது மகளை காணவில்லை என அவரது பெற்றோர், ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே சென்னை சென்ற மாணவனும், மாணவியும் இருச்சக்கர வாகனத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி வரும் போது திண்டிவனம் அருகே உள்ள மன்னார்சாமி கோவில் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பிரம்மதேசம் காவல் நிலைய காவலர் இளங்கோ என்பவர் இருச்சக்கர வாகனத்தை நிறுத்தி காதலர்களான பள்ளி மாணவன், மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது இருவரும் காதலர்கள் என்பதும், வீட்டிற்கு தெரியாமல் வந்துள்ளதையும் தெரிந்து கொண்ட காவலர் இளங்கோ, மாணவியை பாதுகாப்பாக தானே அழைத்து சென்று அவரது வீட்டில் விட்டு விடுவதாக கூறி மாணவரை அவரது வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த காவலர் இளங்கோ, பின்னர், அந்த மாணவியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டிற்கு சென்ற மாணவி, பிரம்மதேசம் காவல் நிலைய காவலர் இளங்கோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பிரம்மதேசம் காவல் நிலைய காவலர் இளங்கோ மீது போக்சோ வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரோந்து பணியில் ஈடுபட்ட போது காவலர் ஒருவரே 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN