Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)
கோபிசெட்டிபாளையத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட எழுச்சிப்பயணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த பிரச்சார கூட்டத்திற்கு கொண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் அர்ஜூனன் வந்திருந்தார்.
பிரச்சாரக் கூட்டத்திற்கு இபிஎஸ் வருவதற்கு முன்னதாகவே, அர்ஜூனனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மயங்கிவிழுந்தார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நேற்றைய தினமே இபிஎஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக தொண்டர் அர்ஜுனனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக இன்று வருகை தந்தார்.
அங்கு அர்ஜூனன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அர்ஜுனன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
இது மிக துயரமான சம்பவம். அர்ஜுனன் பல ஆண்டுகளாக அதிமுகவின் உறுப்பினராக இருந்து வருகிறார். அவரது இறப்பு எங்களுக்கு மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறினோம். அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம்.
அர்ஜுனனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். என்னுடன் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அர்ஜுனன் உயிரோடு இருந்தபோது கட்சிப் பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தாயாருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் இப்போது 10 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறோம்.
தலைமைக் கழகத்தின் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்க இருக்கிறோம். மொத்தத்தில் அதிமுக சார்பில் அவரது குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ