Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 1 டிசம்பர் (ஹி.ச.)
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் 13 வீடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 42 சவரன் நகை மற்றும் 1.5 இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.
இதை அடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் ஆட்டோ மூலம் வந்து கொள்ளை அடித்து விட்டு அதே ஆட்டோவில் திரும்ப சென்றது தெரிய வந்தது.தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டனர்.
அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு அம்மூவரும் தப்ப முற்படவே அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
மேலும் மூவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மேலும் 12 பேரை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ஆட்டோ வாகனத்தின் பதிவினை வைத்து ஆட்டோ ஓட்டி வந்த கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அடுத்த மைல்கல் பகுதியைச் சேர்ந்த அயூப்கான் என்ற ஆட்டோ ஓட்டுநரையும் பிடித்து விசாரித்ததில் அவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட அவருடன் வசித்து வந்த நபர்களுக்கு அவ்வப்போது ஆட்டோ ஒட்டி வந்ததும் பல்வேறு சமயங்களில் பல இடங்களுக்கும் அவரது ஆட்டோவையே கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதை அடுத்து அயூப்கானை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
எனவே கொள்ளை சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்ட நிலையில் நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan