Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடிய விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக்காலமாக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன் தென்காசி அருகில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தனர். இப்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய இரு பேருந்துகளில் ஒரு பேருந்தின் ஓட்டுனர் தூங்கியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து பணி வழங்கப்பட்டதால் ஏற்பட்ட சோர்வு தான் விபத்துக்கு காரணமா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
சாலைகளை சரி செய்வது, பேருந்துகளை சீரமைப்பது, போக்குவரத்து விதிகளை தீவிரமாக பின்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ