Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, வளைவுகளை அகற்றுவது, சிக்னல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை ஆகிய வழித் தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் வழித்தடத்தில், ஜோலார்பேட்டை - கோயம்புத்தூர் வரை பாதையை மேம்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி முடிந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை - கோயம்புத்தூர் (286 கி.மீ) மார்க்கத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது, 145 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதிக்கப்பட்டது.
இப்பாதையில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி கிடைத்த பிறகு, பயணிகளின் பயண நேரம் குறையும்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஜோலார்பேட்டை - கோவை தடத்தில் வேகத்தை அதிகரிக்க ரயில் பாதையின் தரம், சிக்னல் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தெற்கு ரயில்வேயில் கடந்த 3 ஆண்டுகளில், 2,794 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதைகள் தரம் உயர்த்தப்பட்டு, மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வரும் 2026-27-ம் நிதியாண்டில், சென்னை எழும்பூர் - விழுப்புரம், விழுப்புரம் - விருத்தாசலம், விருத்தாசலம் - திருச்சி, கொல்லம் - திருவனந்தபுரம், சொரனூர் - கண்ணூர், கண்ணூர் - மங்களூர் ஆகிய 6 வழித்தடங்களில் 711 கி.மீ. தொலைவுக்கு மணிக்கு 130 கி.மீ. வரை வேகத்தில் ரயில்களை இயக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்காக, ரயில் பாதை, தானியங்கி சிக்னல் முறை தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN