Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 1 டிசம்பர் (ஹி.ச.)
பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், இதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணியின்போது, உயிரிழந்த 35 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், அடையாளம் காண முடியாதவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அக்டோபர் 27-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
மேற்கண்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. 12 மாநிலங்களில் உள்ள 321 மாவட்டங்கள், 1,843 சட்டப்பேரவை தொகுதிகளில் இருக்கும் 51 கோடி வாக்காளர்கள் இந்த பணியின் போது சரிபார்க்கப்படுகின்றனர். இந்த பணிகளை டிச.4-ம் தேதிக்குள் முடிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்க 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டனர்.
அரசியல் கட்சிகள் சார்பில் 2.39 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ) நியமிக்கப்பட்டு, பிஎல்ஓக்களுக்கு அவர்கள் உதவி வருகின்றனர்.
இதுவரை 6.33 கோடி படிவங்கள் (98 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் 5.61 கோடி (87 சதவீதம்) வாக்காளர்களிடம் இருந்து படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தேர்தல் பணி, மழை நிவாரணப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் வருவாய்த் துறை அலுவலர்கள், பிஎல்ஓக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினரும், எஸ்ஐஆர் பணிக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதே போல, கேரள மாநில அரசு ஊழியர்களும் காலநீட்டிப்பு கோரியிருந்தனர்.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு காலநீட்டிப்பு வழங்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
எஸ்ஐஆர் பணிகளை முடிப்பதற்கான அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணிகளும் அன்றே நடைபெற உள்ளது. டிச.12 முதல் 15-ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
எஸ்ஐஆர் பணி, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி, எஸ்ஐஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அதன் மீது ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான காலக்கெடு டிச.16 முதல் ஜன.15 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இந்த அறிவிப்பை தமிழக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM