Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 1 டிசம்பர் (ஹி.ச.)
கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்தனர்.
அப்போது காவல்துறையினரை தாக்கி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓட முற்பட்டதால் போலீசார் அம்மூவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பின்னர் மூவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அவர்களது காலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் உயிரிழந்தார்.
இதையடுத்து நீதிபதி தலைமையிலான விசாரணை நடைபெற உள்ளதாகவும் நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஆசிப் உயிரிழப்புக்கு காரணம் போலீசாரின் துப்பாக்கி சூடா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan