Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானாரின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த மன வேதனை அளிக்கின்றன.
தென்காசியில் நடந்த உயிரிழப்புகளின் ரணம் ஆறும் முன்பே, மீண்டுமொரு பெரும் விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் முழு குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இத் தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இதற்கான காரணிகளை அறிந்து, அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமெனவும் திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ