Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 1 டிசம்பர் (ஹி.ச.)
நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று (01/12/2025) காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது.
இந்தத் தனிப்பட்ட திருமண வைபவத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.
இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது.
ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துகிறது.
ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது.
இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் நடைபெறுகின்றன.
Hindusthan Samachar / V.srini Vasan