Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (டிச 10) அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தின் தொடக்கத்தின் போது, விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.
அதே சமயம் அக்கட்சியின் அவைத் தலைவரும், இன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய தமிழ்மகேன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக செயற்குழுவின் தற்காலிக அவைத் தலைவராக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு செயற்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
தீய சக்தி திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே நமக்கு தாரக மந்திரம்.
அன்றைக்கு ஆட்சியில் இருந்தபோதும், இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர்.ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.
மு.க.ஸ்டாலின் அவர்களே அன்றைக்கு சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே அழைந்தீர்கள். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது நீங்கள் எப்படி அழைவீர்கள் என்று தெரியவில்லை.
இன்றைக்கு எதிர்க்கட்சிகளும், ஏன் தி.மு.க.வால் கூட அ.தி.மு.க. ஆட்சியை குறைசொல்ல முடியவில்லை. பொற்கால ஆட்சியை கொடுத்தோம். அதே ஆட்சி மீண்டும் அமைய நீங்கள் அத்தனை பேரும் உதவ வேண்டும்.
இங்குள்ளவர்கள் நினைத்தால் நிச்சயம் அது நிறைவேறும். நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெறுவோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.
அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b