சாலை ஓரமாக உயிரிழந்த கோழிகளை கொட்டி சென்ற விவகாரம் - 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தென்காசி, 10 டிசம்பர் (ஹி.ச) தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையின் ஓரமாக நேற்றைய தினம் உயிரிழந்த 500-க்கும் மேற்பட்ட கோழிகளை சில நபர்கள் வீசி சென்ற நிலையில், பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்
Aai kudi Police Station


தென்காசி, 10 டிசம்பர் (ஹி.ச)

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையின் ஓரமாக நேற்றைய தினம் உயிரிழந்த 500-க்கும் மேற்பட்ட கோழிகளை சில நபர்கள் வீசி சென்ற நிலையில், பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற சுகாதாரத் துறையினர் மற்றும் ஆய்க்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையின் ஓரமாக கொட்டப்பட்டிருந்த உயிரிழந்த கோழிகளை அப்புறப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக ஆய்க்குடி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில், ஆய்க்குடி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நோய் தொற்று ஏற்படும் வகையிலும், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சாலையின் ஓரமாக உயிரிழந்த கோழிகளை கொட்டிச் சென்ற நபர்கள் தென்காசி பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளரான அபுபக்கர் சித்திக் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த நபர் அதே பகுதியை சேர்ந்த திவான் ஒலி என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, இரண்டு பேரையும் தற்போது போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மழையின் காரணமாக கோழிகள் உயிரிழந்ததாகவும் அந்த கோழிகளை சாலையில் கொட்டி சென்றதையும் அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN