Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
சபரிமலையில் மண்டல பூஜை டிச. 27-ம் தேதி நடைபெற
உள்ளது. இதற்காக, கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு மறுநாள் முதல் தொடர் வழிபாடுகள் நடக்கின்றன.
தினமும் 75 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்திருந்தாலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்காக தினமும் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக பல்வேறு
வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக ‘அய்யன்’ எனும் செயலி பல்வேறு வழிகாட்டுதல்களை பக்தர்களுக்கு அளித்து வருகிறது. இதில் தகவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வழிகாட்டுதல்
உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், வழிபாட்டு நேரம், பக்தர்கள் செய்ய வேண்டியவை, எரிமேலி, சத்திரம் உள்ளிட்ட வனப் பாதைகளின் தூரம்,
அங்குள்ள மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் இடம்
பெற்றுள்ளதுடன், யானை, புலி, செந்நாய், காட்டெருமை
உள்ளிட்ட விலங்குகள் காட்டுப் பாதையில் குறுக்கிட்டால், அது குறித்த தகவல்களும்
பக்தர்களுக்கு செயலியில் பகிரப்படுகின்றன.
இச்செயலி இணையம் இல்லாத இடத்திலும் செயல்படும். இதில் தங்கள் இடத்தை (லொகேஷன்) பகிர்ந்தால், அவர்கள் செல்லும் பாதையில் உள்ள பல விவரங்கள்
குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது.
பாதை தவறி வனத்துக்குள் சென்றுவிட்டால், பகிரப்பட்ட ‘லொகேஷன்’ மூலம் மீட்புக்
குழுவினர் விரைந்து சென்று பக்தர்களை மீட்டு விடுவர்.
பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில்
‘அய்யன்’ என்று ஆங்கிலத்தில் டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி
உள்ளிட்ட 6 மொழிகளில் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
சபரிமலை பாதையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தும் இந்த செயலியை
பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என்று வனத் துறையினர்
தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM