Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 டிசம்பர் (ஹி.ச.)
ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் 12ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார். மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
Hindusthan Samachar / Durai.J