Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் வகையில் ஆளும் கட்சியான திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை இன்று (டிச 10) தொடங்கியது. தமிழ்நாடு முழுக்கவும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்கும் வகையில் இந்த பரப்புரை தொடங்கியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச 10) நேரடியாக கலந்து கொண்டார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடந்த வாக்குச்சாவடி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்தனர்.
இதே போல தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பரப்புரையில் மாநில நிர்வாகிகள் முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை பங்கேற்றனர்.
தான் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b