Enter your Email Address to subscribe to our newsletters

கட்டாக், 10 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது.
ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் (14 ரன்) சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் போல்டானார். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்தனர். பின்னர் வந்த டேவிட் மில்லர் (1 ரன்), டோனோவன் பெரீரா (5 ரன்கள்), மார்கோ ஜான்சன் (12 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அசத்தலாக பந்து வீசிய இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக், துபே மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM