Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 10 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகள் பசுமையான பல இடங்கள் உள்ளன. குறிப்பாக களக்காடு மற்றும் மேல்கோதையார் பகுதிகளில் ஆண்டுதோறும் மிகுந்த மழை பெய்கிறது. கோதையார் என்பது கல்லிடைக்குறிச்சியில் இருந்து சுமார் 3000 அடி உயர மலை உச்சியில் காணப்படும் வனப்பகுதியாகும்.
இதன் அருகில் தான் புகழ்பெற்ற மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவில் அதிக மழை பொழிவை தரும் பகுதியாக உள்ளது. ஆண்டுதோறும் 8 மாதங்கள் வரை இங்கே மழை பெய்யும். இதன் மிக அருகில் தான் கோதையார் பகுதி அமைந்துள்ளது.
எனவே தொடர் மழையால் கோதையார் முழுவதுமே பச்சை பசேல் என்று புற்கள் நிறைந்தும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படும். இங்கு அழகான நீரோடைகளும் பல உள்ளன. அடிக்கடி பெய்யும் மழையால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் ஆண்டு முழுவதும் வறண்டு போகாது. எனவே யானைகள் எந்த நேரத்திலும் தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும், உடலை குளிர்விக்கவும் முடிவதால் யானைகள் இப்பகுதியில் அடிக்கடி வலம் வரும்.
இந்த பாதுகாப்பு மண்டலத்தில் செழித்து வளரும் வனங்கள், ஈர வனங்கள், பசும்புல் நிலங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் உள்ளன. இவ்வளவு பல்வகை தாவர வளம், மூங்கில், புல், பழங்கள், மரத்தோல், பனை வகைகள், கொடி வகைகள் போன்றவை யானைகளுக்கு நிறைவான உணவுகளை வழங்குகிறது. இதனால் இங்கு வசிக்கும் யானைகள் உணவு தேடி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
யானைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இங்கு இருப்பதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கொடூர குணம் கொண்ட காட்டு யானைகளை பிடித்து கோதையாறு வனப்பகுதியில் விடுகின்றனர். அதன்படி தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை 3 வருடங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் விடப்பட்டு தற்போது நல்ல முறையில் வாழ்ந்து வருகிறது.
அதே போல் புல்லட் யானை விடப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் யானையும் இங்கு தான் விடப்பட்டது. இது போன்ற சூழ்நிலையில் கோதையாறு வனப்பகுதியில் சுமார் 20 யானைகள் கூட்டமாக இரை தேடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
அங்கு வனத்துறையினர் ரோந்து செல்ல ஜீப் பாதை உள்ளது. அந்த பாதை முழுவதும் யானையின் சாணம் நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதியை சுற்றிலும் இன்னும் ஏராளமான யானைகள் வசிப்பது தெரிய வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN