நம்மை பிரிக்கக்கூடிய கலவர செயலில் பலர் ஈடுபடுகின்றனர். அறிவா அரசியலா என்று போகும் போது, தமிழ்நாட்டு மக்கள் அறிவின் பக்கம் தான் நிற்பார்கள் -அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.) மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திருஞானம் எழுதியுள்ள ஒரு ட்ரில்லியன் டாலர் கனவு நூல் அறிமுக விழா சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் ம
Anbil Mahesh


சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)

மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திருஞானம் எழுதியுள்ள ஒரு ட்ரில்லியன் டாலர் கனவு நூல் அறிமுக விழா சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

மாநில திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நூலாசிரியர் திருஞானம், 20 லட்சம் கோடியில் இருந்து 35 லட்சம் கோடியாக தமிழ்நாட்டின் ஜிடிபியை உயர்த்தியிருக்கின்றார் நம் முதல்வர். இந்த இலக்கு 90 லட்சம் கோடியை எட்டும் போது ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக நாம் இருப்போம், என்றார்.

தலைமையுரை ஆற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய முழு உரிமை மாணவர்களுக்கு உள்ளது. யாரையும் கையை பிடித்து இழுத்து வந்து ஓட்டு போடுங்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் முடிவு செய்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் நாடு சார்ந்து நாட்டு மக்கள் சேர்ந்து பொருளாதாரமும் சார்ந்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு சார்ந்த சமுதாயமாக நம்மை மாற்றிக் கொண்டு, அதன்பின்பாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவை இன்றைய இளைய சமுதாயம் எடுக்க வேண்டும்.

2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முதலமைச்சர் தனக்கான இலக்காக ஒரு லட்சம் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வைத்துக் கொண்டார். தனக்கான இலக்காக மட்டுமல்லாமல் அது மக்களுக்கான இலக்காகவும் வைத்துக்கொண்டார்.

இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து ஒரு புரிதல் கிடைக்கும். 90 லட்சம் கோடியை தொட்டால் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக நாம் பயன்படுத்திய உடை, செருப்பு போன்றவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். நமக்கே தெரியாமல் நாம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பது தெரியும், இதுவுன் பொருளாதார வளர்ச்சியில் ஓர் அறிகுறி தான்.

2023-24 ஆண்டில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.

கிராமப்புரத்தில் நான் என்ன சாதி தெரியுமா என்று கேட்ட மக்களை, நான் என்ன படித்திருக்கிறேன் என்று தெரியுமா என சாதிகளை மாற்றி கல்வியை கொண்டு சென்றவர் கலைஞர். நாம் இவ்வாறு ஒட்டுமொத்த வளர்ச்சி, பொருளாதாரம் என இப்படி பேசும்போது, சிலர் நாங்கள் தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றி காட்டுவோம், இங்கு கலவரத்தை கொண்டு வருவோம் என ரூம் போட்டு யோசிக்கின்றனர். நம்மை பிரிக்கக்கூடிய செயலில் ஈடுபடுகின்றனர். அறிவா அரசியலா என்று போகும் போது, தமிழ்நாட்டு மக்கள் அறிவின் பக்கம் தான் நிற்பார்கள் ,என்றார்.

தொடர்ந்து பேசிய திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்,

இது இன்று நேற்றைய கனவல்ல ஒரு நூற்றாண்டு கனவு. 1925ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஒரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயம் இருக்க வேண்டும், சகோதரத்துவம், சமத்துவம் குறித்து பேச வேண்டும் என்று இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் வேறு ஒரு இயக்கம் தோன்றுகிறது. ஏற்கனவே ஏற்றத்தாழ்வோடு இருக்கக்கூடிய சமுதாய அமைப்பை மீண்டும் கட்டிக் காப்போம்.

ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வை இப்போது இருப்பதை விட மூன்று மடங்கு உயர்த்துவது தான்.

மோடி முதலமைச்சர் ஆக இருக்கும் போது குஜராத் மாடல் பற்றி பேசினார்கள். ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு பெரும் ஆதரவளித்து, அரசே பெரும் நிதி உதவி செய்து, அந்த பெரிய நிறுவனங்கள் வளர்வது என்பதுதான் குஜராத் மடலாக இருந்தது. அதை தான் நீங்கள் இப்போது பார்ப்பது. இந்தியாவில் இருக்கக்கூடிய துறைமுகங்களில் பாதி துறைமுகம் ஒரு நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பாதி விமான நிலையங்கள் ஒரு நிறுவனத்திடம் இருக்கிறது. மொத்தத்தையும் கபளீகரம் செய்யக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவது தான் அந்த மாநிலத்தின் வளர்ச்சியாக காட்டப்படுகிறது.

ஆனால் நம் மாடல் எல்லோருக்குமான வளர்ச்சி. இங்கிலாந்தின் எக்கனாமிஸ்ட் நாளிதழில் 2047 இந்தியா வளர்ந்த நாடாகி விடுமா என்ற கேள்வி எழுப்பி சாத்தியமாகிவிடுமா என்று கேட்டிருக்கின்றது. அதற்கு இரண்டு மாநிலங்களில் தான் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என கூறிய அந்த பத்திரிக்கை, ஒன்று குஜராத் இன்னொன்று தமிழ்நாடு எனக் கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் சாத்தியமாகி உள்ளது என கூறியிருக்கின்றது, கல்வியை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது என்பது நூறாண்டு கால பயணம். பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கு உணவு தடையாக இருந்தால் உணவை கொடு, போக்குவரத்து தடையாக இருந்தால் போக்குவரத்துக் கொடு, புத்தகம் கொடு, பேருந்து அட்டை கொடு, காலை உணவும் கொடு, வெளியே செல்லக்கூடிய மாணவர்களை உள்ளே அழைத்து வந்து கல்வியை அனைவருக்கும் பரவலாக்க கொடுப்பதே பொருளாதாரமும் சமுதாயமும் பெரிய மாற்றத்தை அடைவது.

நாளைய சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக வரவேண்டும். அப்படியாக இருந்தால் தான் விடுதலை பெறும்போது நாம் என்ன கனவு கண்டோமோ அதை நாம் அடைய முடியும்.

அம்பேத்கர் கண்ட கனவை நிறைவேற்றும் ஒரே மாநிலமாக இருப்பது தமிழ்நாடு மட்டும்தான்.

சிலர் வேண்டுமென்றே மாற்று பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். மாணவர்கள் எல்லாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கு வேண்டும், என்றார்.

தொடர்ந்து பேசிய தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம்,

1950 களில் பீகார் முதல் மாநிலம் ஆக இருந்தது. நாம் கடைசியில் இருந்து இரண்டாவது மாநிலமாக இருந்தோம். ஆனால் இன்று கீழிருந்து இரண்டாவது இடத்திலிருந்து முதல் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளோம்.

பீகாரின் பொருளாதாரம் இயற்கை வளங்களை சார்ந்து இருந்தது. ஆனால், நம் மாநிலத்தில் இயற்கை வளங்கள் குறைவாக இருந்தாலும், மக்கள்தான் நம் மூலதனம் என்று அப்போதைய தலைவர்கள் யோசித்தனர். சிலர் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு அப்போதே பணக்கார மாநிலமாக இருந்தது. நீங்கள் இப்போது மாற்றியது போல பேசுகிறீர்கள் என கூறுவார்கள். உண்மை அதுவல்ல.

ஆனால் 70 ஆண்டுகளில் ஏழைகளே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என மூன்றும் கொடுத்து விட்டால் மக்கள், பெண்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். இதற்காக தான் நாம் மக்களுக்கு திட்டங்கள் மூலம் கொண்டு சேர்க்கிறோம். இருமொழிக் கொள்கை நம் மாநிலத்தை காக்கிற அரண் போல இருக்கிறது.

மாணவர்கள் படித்து முடித்த பின் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறோம் என்பது மேம்பாடு மட்டுமல்ல. இப்படி எல்லாரும் அனைவரும் வேலைக்கு சென்றாலும் கூட முதலாளி வேறொருவராக இருந்தால் அது மாநிலத்திற்கு வளர்ச்சியாக இருக்காது.

எனவே ஒரு பெரும் தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். அதுவே தமிழ்நாட்டை அதனுடைய வளர்ச்சி இலக்கை எட்டும் முக்கிய கருவியாக இருக்கும் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ