Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 10 டிசம்பர் (ஹி.ச.)
பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மண்டல பொறுப்பாளராக இருப்பவர் நீல முரளி யாதவ். இவர், சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலமாக நெல்லைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நீல முரளி யாதவ் எவ்வித ஆவணமும் இல்லாமல் அதிகளவு பணம் எடுத்துக் கொண்டு ரயில் மூலமாக செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து திண்டுக்கலில் இருந்து தனிப்படை போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அந்த ரயில் கோவில்பட்டி நிலையத்தில் நின்ற போது திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி தனிப்படை போலீசார் திடீரென நீல முரளி யாதவ் இருந்த பெட்டியில் ஏறி சோதனை செய்த போது அவரிடம் 9 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மண்டல பொறுப்பாளரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தகவலறிந்து பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடையே கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தார்.
Hindusthan Samachar / ANANDHAN