Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 10 டிசம்பர் (ஹி.ச.)
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்திய சிறைத்துறை போலீஸ் மற்றும் பணியாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பாளையங்கோட்டை மத்திய சிறை நுழைவாயிலில் பணியில் இருந்தவர்கள் மற்றும் சிறை வளாகத்தில் இருந்த சிலரது செல்போன்கள் நிர்வாகத்தால் திடீரென ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
சிறைத்துறை போலீஸ் மற்றும் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது சிறை வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது அரசு உத்தரவாகும். இந்த விதிமுறை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
சிறைப்பணி என்பது 24 மணி நேரமும் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டிய மிக முக்கியமான பணியாகும்.
பணியின்போது செல்போன்களைப் பயன்படுத்துவதால் கணநேரம் கவனம் சிதறல் ஏற்பட்டாலும் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த பாதுகாப்புக் காரணத்திற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணி நேரத்தில் விதியை மீறி செல்போன் பயன்படுத்தியவர்களின் போன்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு சிறைத்துறை தகவல்கள் செல்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், பணி நேரத்தில் கவனச்சிதறலைத் தவிர்க்கவும், அரசு உத்தரவை அமல்படுத்தவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN