Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 10 டிசம்பர் (ஹி.ச.)
கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் முதல் விருப்ப தேர்வாக இருக்கும் ஊட்டிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை பார்ப்பதற்காகவே வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சியின்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்படும்.
மலர் கண்காட்சி தினத்தன்று அந்த தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். மேலும், புல் மைதானங்களில் பல்வேறு வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.
மேலும், பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் முதலே மலர்கள் மலர துவங்கிவிடும். அனைத்து மலர்செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்கும். உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பூக்கும் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகள் அனைத்திலும் பூக்கள் பூத்து குலுங்கும்.
இந்த மலர் கண்காட்சிக்கு பல ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்படும் நிலையில், இவைகளின் வளர்ச்சி காலத்தை பொறுத்து விதை விதைக்கும் பணிகள் துவங்கும். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் விதைகள் சேகரிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விதைக்கும் பணிகள் துவக்கப்படும்.
கடந்த மாதம் விதைகள் விதைக்கும் பணிகள் முடிந்த நிலையில், 5 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளான பெகோனியா, ரெகன்கிளாசம், வால்சம், சோலியாஸ், லிசியந்தால், சால்வியா மற்றும் டெல்பீணம் ஆகிய வகைகளை சேர்ந்த மலர் நாற்றுக்கள் தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் நர்சரியில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நாற்றுகள் தயாரான நிலையில் இம்மாதம் இறுதி வாரத்தில் 6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகள் நாற்று நடவு பணி துவக்கப்படவுள்ளது. இதற்காக, பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதவிர பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகள் சீரமைக்கப்பட்டு நாற்று நடவு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து தோட்டகலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக டிசம்பர் மாதத்தில் நடவு பணிகள் துவங்கும். தொடர்ந்து படிப்படியாக மார்ச் மாதம் வரை நடவு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மலர்கள் பூக்கும் வகையில் அனைத்து மலர் செடிகளும் தயார் செய்யப்படும். 4 முதல் 6 மாதங்கள் வரை வளரும் மலர் செடிகளின் விதைகள் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறிய நாற்றுக்களாக வளர்ந்துள்ளன.
மலர் தொட்டிகள் மற்றும் பாத்திகளில் நடவு செய்யும் பணிகள் இம்மாதம் இறுதி வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b