Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
இதில் பீகார் தேர்தலுக்கு முன்னரே அங்கு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேலைக்காக புலம் பெயர்தல், விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவது, போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது ஆகியவற்றை முறைப்படுத்தவே சிறப்பு வாக்காளர் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறினாலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள், மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாகவே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவம்பர் 4-ந் தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந் தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர்
11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் எஸ் ஐஆர் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்ஐஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் 11-ந்தேதியுடன் அதாவது நாளையுடன் முடிகிறது.
வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந் தேதியில் இருந்து ஜனவரி 15-ந் தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b