Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
2016 ஆம் ஆண்டு உடுமலையில் சங்கர் என்பவரை அவரது காதல் மனைவி கௌசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி கொடூரமான முறையில் ஆணவ படுகொலை செய்தனர்.
இது குறித்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படக் கோரி பாதிக்கப்பட்ட கௌசல்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்தித்த அவர்,
உடுமலைப்பேட்டையில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் என்னுடைய பெற்றோர் கூலிப் படையை வைத்து செய்த ஆணவ படுகொலையில் சங்கர் இறந்து விட்டார்.
சங்கர் ஆணவப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறேன்.
குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு சமுதாயத்தில் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக அரசாங்கம் உரிய நடைமுறைகளை பின்பற்றி சாதிய கொடுமைகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும். அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் தொடர்புடையவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.
இந்த சாதிய ஆவண படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசு தரப்பு தவறி விட்டது. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போதும் விடுதலை அளித்து தீர்ப்பு வந்துள்ளது. அரசு தரப்பில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முன் வைத்திருக்க வேண்டிய காவல் துறை தனது கடமையிலிருந்து தவறியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட எனக்கு துணை நிற்க வேண்டிய அரசு துணை நிற்கவில்லை என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு. அரசின் மெத்தனப்போக்கு காரணமாக, சாதி ஓட்டுகள் போய்விடும் என்பதற்காகவே எங்களுடைய வழக்கை வழக்காகவே எடுத்துக் கொள்ளவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கௌசல்யா, “மற்ற வழக்குகளை ஆறு மாதத்தில் முடித்து வைத்தார்கள். ஆனால் சங்கர் ஆணவ படுகொலை வழக்கை இன்று வரை முடிக்கவில்லை. ஆணவப் படுகொலை தொடர்பாக வழக்கை நடத்துவதற்கு அரசுக்கு எந்தவொரு நாட்டமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது தொடர்பாக கடிதமும் அனுப்பி இருந்தோம். அவரை சந்திப்பதற்கு பலமுறை அனுமதி கேட்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இருப்பினும் இன்று வரை ஆணவப் படுகொலைக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். இனியாவது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN