Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் இன்று (10.12.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் - சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் - பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் - கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார்.
மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
திறந்து வைக்கப்பட்ட கிடங்குகளின் விவரங்கள் பின்வருமாறு :
தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பினை வட்ட அளவில் உறுதி செய்யவும், பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான தானியங்களின் சேமிப்பிற்கான கொள்ளளவினை அதிகப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் 4.97 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் செலவில் 2500 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள்,
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் செலவில் 2500 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், என மொத்தம் 13.97 கோடி ரூபாய் செலவில் 7000 மெ.டன் கொள்ளளவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கிடங்குகளின் விவரங்கள் விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் “ஒரு நெல்மணிக்கூட வீணாகக்கூடாது” என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் உயரிய சிந்தனையை செயல் வடிவமாக்கும் விதமாக மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தில் 170.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,00,000 மெ.டன் கொள்ளளவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் 29.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,500 மெ.டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் 22.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,000 மெ.டன் கொள்ளளவிலும்,
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், பரசலூர் கிராமத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும், தரங்கம்பாடி வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21,000 மெ.டன் கொள்ளளவிலும்; கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி.புடையூர் கிராமத்தில் 12.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,500 மெ.டன் கொள்ளளவிலும் மற்றும் திட்டக்குடி வட்டம், தாழநல்லூர் கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11,000 மெ.டன் கொள்ளளவிலும்;
திருவண்ணாமலை மாவட்டம், மேல்பெண்ணாத்தூர் வட்டம், செங்கம் கிராமத்தில் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,000 மெ.டன் கொள்ளளவிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கோவிலம்மாபட்டி கிராமத்தில் 12.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூப்பள்ளி கிராமத்தில் 12.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும்; என மொத்தம் 2,18,000 மெ.டன் கொள்ளளவில், 332 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் அ. அண்ணாதுரை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, விவசாய சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b