Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் சிபிஎஸ் ஆசிரியர்களுக்கு மறு நியமன காலத்தில் கடைசியாக பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாடு அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி பயிற்றுவிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக தொடர்புடைய கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறுவதால் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவ்வாசிரியர் கல்வியாண்டின் இறுதிவரை பணிபுரிய ஏதுவாக நிபந்தனைகளுடன் மறுநியமனம் செய்திட தெளிவுரை வழங்கப்படுகிறது.
ஒரு கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை, மறுநியமனம் செய்வதற்கான விருப்பக்கடிதம் தொடர்புடைய ஆசிரியர்களிடமிருந்து பெற வேண்டும்.
மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் வயது முதிர்வில் ஓய்வு பெற்ற நாளுக்கு மறுநாள் முதல் தொடர்புடைய கல்வி ஆண்டு முடியும் வரை அல்லது தேவை உள்ள வரை இதில் எது முந்தையதோ அதுநாள் வரை அவர்கள் இறுதியாக பெற்ற மொத்த ஊதியத்தினை ஒப்பந்த அடிப்படையிலான ஊதியமாக வழங்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழான பணியாளர் மற்றும் அரசுப் பங்களிப்பு ஆகியவற்றினை பிடித்தம் செய்ய தேவையில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குண்டான மாதாந்திர சந்தாத் தொகையே, மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு மாதாந்திர சந்தாத் தொகையாக மறுநியமன ஒப்பந்த காலம் முழுவதும் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
மறுநியமனம், செய்யப்படும் ஆசிரியர்களுடைய இறுதி மாத ஒப்பந்த ஊதியம் தொடர்புடைய பணிநியமனம் செய்த அதிகாரி அளவில் இழப்பில்லா சான்று பெற்ற பின்னர் வழங்கப்பட வேண்டும்.
இழப்புகள் ஏதேனும் அவருடைய இறுதி மாத ஒப்பந்த ஊதியத்திற்கு மிகைப்பட்டிருப்பின் அது குறித்து அரசின் உரிய தெளிவுரைகளை பெற்று மேல்நடவடிக்கை தொடரப்பட வேண்டும்.
01.04.2003 -க்கு பின்னர் இதுநாள் வரை மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மேற்சொன்ன மறுநியமன பணிக்காலத்திற்கான ஊதிய நிர்ணயத்தின் அளவில் குறைவாக பெற்றிருப்பின் தொடர்புடைய வித்தியாசத் தொகை சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்று வழங்கப்பட வேண்டும்.
கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியரின் பணியிடத்தினை அக்கல்வியாண்டு முடியும் வரை காலிப்பணியிடமாக அறிவிக்கப்படக்கூடாது.
மேலும் அக்கல்வியாண்டில் மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர் மூலம் கல்விப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b