Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் இன்று
(டிச 10) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும், நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் முக்கிய செயல்பாடுகள் நிலங்களை அளவிடுதல், உட்பிரிவு செய்தல், பட்டா மாற்றம் செய்தல், நில ஆவணங்களைப் பராமரித்தல், கணினிமயமாக்கல் மற்றும் நில உரிமை முறைகளை முறைப்படுத்துதல் போன்றவையாகும். இது வருவாய் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு, நிலம் தொடர்பான உரிமைகள், இருப்பிடம், அளவு மற்றும் வகை பற்றிய தகவல்களைப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிப்பதை உறுதி செய்கிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 800 நிலஅளவர்களும், 302 வரைவாளர்களும் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்சமயம் 2025-ஆம் ஆண்டில் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, நில நிருவாக ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b