Enter your Email Address to subscribe to our newsletters


திருவள்ளூர், 11 டிசம்பர் (ஹி.ச)
அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள்.
இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.
Out of Contact முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களே, ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ