Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 டிசம்பர் (ஹி.ச)
மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று (டிச 11) அவர் பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் பாரதியார் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், பேரூராட்சி மன்ற தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பாரதி வேடமணிந்த மாணவியை பல்லக்கில் வைத்து, பாரதியார் பிறந்த இல்லத்தில் இருந்து ஊர்வலமாக மணிமண்டபம் வரை கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் பாரதியின் வரிகளை கோஷமிட்டபடி வந்தனர். எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து பள்ளி, வீரபாகு வித்யாலயா, பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ். பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாரதியார் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மகாகவி பாரதியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
பாரதியார் பிறந்த இல்லத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு மக்கள் கூட்டமாக செல்ல வேண்டாம்
என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அங்குள்ள மகாகவி பாரதியின் மார்பளவு சிலைக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b