Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு முன் தயாரிப்பாக இன்று (டிச 11) ஒரு நாள் வேலை நிறுத்தம் புதிய பென்ஷன் திட்டம் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெறவுள்ளது.
அரசு ஊழியர்கள் பங்கேற்பில் பழைய ஓய்வூதியம் என்ற ஒற்றை கோரிக்கைக்காக இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று விடுமுறை எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் எச்சரித்து விடுத்துள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனுப்பிய சுற்றறிக்கையில் இன்று அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர தற்செயல் விடுப்பு என எந்த வித விடுப்பும் அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு ஊழியர்களில் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் ஊழியர்களின் வருகைப் பதிவு குறித்த அறிக்கையை காலை 10.15 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b