Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யா. 24 வயதாகும் இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் எண்ணூர் காவல்நிலையத்தில் சரித்திர குற்றவாளி என சத்யா அடையாளபடுத்தப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எண்ணூர் பகுதியில் விஜய் என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சத்யா முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சத்யா நள்ளிரவு திருவொற்றியூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை ஒரு கும்பல் பைக்கில் துரத்தி வந்திருக்கின்றனர். இதனையறிந்த சத்யா உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நுழைந்திருக்கிறார். இந்த நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் சத்யாவை அவரை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தவலறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்யாவின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் சத்யாவை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் முன் பகை காரணமாக சத்யா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பழிவாங்கல் நடவடிக்கையாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என அதன் அடிப்பைடியில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN