Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
யூடியூப்பர் முக்தார் அகமது, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நடைபெற்றுள்ளதாக கூறி பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு கருத்துக்களை பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் முக்தார் அகமதிற்கு பல்வேறு வழிகளில் எதிர்ப்புகள் தெரிவித்தும் காவல்துறையில் புகார் அளித்தும் வருகின்றனர்.
இதேபோல் நாடார் அமைப்பினரும் தமிழகம் முழுவதும் முக்தார் அகமது மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்களையும் காவல்துறையில் புகார் மனுக்களையும் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஏராளமான புகார்கள் முக்தார் அகமது மீது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ராம் மோகன் சென்னை மாவட்ட தலைவர்கள் எம்எஸ் திரவியம், முத்தழகன் உள்ளிட்ட பலர் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து புகார் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார்,
யுடியூப்பர் முக்தார் அகமது தனது youtube பக்கத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை பேசியுள்ளார்.
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அடிப்படையில் இப்படி பேசி வரும் முக்தார் அகமது மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரது பேச்சு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜரை பற்றி பேசியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது அவர் மன்னிப்பு கேட்டாலும் அவரை கைது செய்ய வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ