Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்' (பூமியின் வெற்றியாளர்கள்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் விருதை பெற்றுள்ள சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது!
காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக யு.என்.இ.பி அமைப்பின் ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்' விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு சுப்ரியா சாகு அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், Plastic பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b