ரூ.1,500 கோடியை திருப்பி தந்தது இண்டிகோ நிறுவனம் - விமான அதிகாரி அம்புஜ் சர்மா தகவல்
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.) கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து, விமான சேவை ரத்து குறித்து ஆராய 4 பேர் க
Chennai International Airport


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து, விமான சேவை ரத்து குறித்து ஆராய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், விமான முன்பதிவுக்கான கட்டணத்தை திரும்ப செலுத்த, இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, இதுவரை ரூ.1500 கோடி பணம் பயணிகளிடம் திரும்ப வழங்கியுள்ளதாகவும், 1,060 பயணிகளின் உடைமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை துணை செயலாளர் அம்புஜ் சர்மா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமான சேவை பாதிப்பு குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை துணை செயலாளர் அம்புஜ் சர்மா, விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் மற்றும் விமான ஆணையக அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அம்புஜ் சர்மா கூறியதாவது, “கடந்த ஒன்பது நாட்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையில் ஏற்பட்ட பிரச்சினை கரணமாக, சென்னை விமான நிலையத்தின் சேவை குறித்து ஆய்வு செய்தேன். இதில், கடந்த 5ஆம் தேதி விமான சேவைகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 186 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது. ஆனால் இப்போது சென்னை விமான நிலையம் வேகமாக இயல்பு நிலைக்கு முன்னேறி வருகிறது. இதனை உறுதி செய்ய அதிகாரிகள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். பயணிகளின் கருத்துக்களை பெற்றோம். சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இதுவரை 1,060 பயணிகளின் உடைமைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 44 பயணிகளின் உடைமைகள் வழங்கப்பட உள்ளன. இதில், 18 பயணிகளின் விவரங்கள் முழுமையாக தெரியாததால் அவர்களிடம் உடைமைகள் வழங்கப்படாமல் உள்ளது. கூடிய விரைவில் அவை உரியவர்களிடம் வழங்கப்படும். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையை நிறுவனம் தரவில்லை. இந்தியா முழுவதும் ரூ.1,500 கோடிக்கு மேல் இண்டிகோ நிறுவனம் திரும்ப வழங்கியுள்ளது” என்றார்.

தொடர்ந்து சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் கூறுகையில், “ கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி அதிக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. அதனால், டெல்லி செல்லவேண்டிய பயணிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான சேவைகள் தற்போது இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

விமான நிலையத்தில் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 1 ஆம் தேதி 67 ஆயிரம் பயணிகள் இருந்த நிலையில், 5 ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 36 ஆயிரமாக குறைந்தது.

ஆனால், 9 ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 53 ஆயிரமாக உயர்ந்துள்ளது. முனையங்களை மேம்படுத்தி பயணிகளுக்கான வசதிகளை செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN