Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 11 டிசம்பர் (ஹி.ச)
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் தர்மபுரம்மடம் மற்றும் சிவசைலம் கிராமங்களில் அமைந்துள்ள கடனாநதி அணையானது 85 அடி உயரம் கொண்டதாகும்.
இந்த அணையில் நேற்று
(டிச 10) காலையில் 83.50 அடி நீர்மட்டம் இருந்த நிலையில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நீர்வளத்துறை சிற்றாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மணிகண்டராஜன் தலைமை தாங்கி தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
வருகிற மார்ச் 31-ந் தேதி வரை 112 நாட்களுக்கு அணையில் நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 125 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள தர்மபுரம்மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி I-II, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி, ரெங்காசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 9,923 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b