Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 11 டிசம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் காவல் எல்லைக்குட்பட்ட அப்புராசபுத்துாரில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் இக்கோயிலில் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த இரண்டு பேர், கோயிலுக்குள் இருந்த சுமார் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து கோயில் அர்ச்சகர் ராமலிங்கம் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது மயிலாடுதுறை பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (20) மற்றும் முகமது அலி (19) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இவர்கள் இருவரையும் பிடிக்க பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போதைக்கு அடிமையான இருவரும் மது அருந்துவதற்காக இதுபோன்று பல்வேறு கோயில்களின் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களிடமிருந்த ஐம்பொன் அம்மன் சிலை, பித்தளை பொருட்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றம் இழைத்தவர்களை கண்டுபிடித்து கோயில் சொத்துகளை மீட்ட தனிப்படையினரை மயிலாடுதுறை (பொறுப்பு), நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் வெகுவாக பாராட்டினார்.
Hindusthan Samachar / ANANDHAN