டெலிவரி செய்ய சென்ற இடத்தில் காதல் - விபரீத ஆசையால் இளைஞர் பலி
தஞ்சை, 11 டிசம்பர் (ஹி.ச.) தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (31). இவர், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருதானல்லூர் பகுதியில் உள்ள சபிசக்கரவர்த்தி
Prison


தஞ்சை, 11 டிசம்பர் (ஹி.ச.)

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (31). இவர், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருதானல்லூர் பகுதியில் உள்ள சபிசக்கரவர்த்தி (33) என்ற ரவுடியின் வீட்டிற்கு பொருள் ஒன்றை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அதனை வீட்டில் இருந்த அவரது மனைவி வந்து வாங்கிச்சென்றுள்ளார். அந்த பெண்ணை புகழேந்திக்கு பிடித்துவிடவே, கொரியர் பில்லில் உள்ள அவரது செல்போன் எண்ணை தான் தனிப்பட்ட எண்ணில் சேமித்து வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து, அந்தப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, “நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க … I Love You…” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால், கோபமடைந்த அப்பெண் தனது கணவர் சிபிசக்கரவர்த்தி (33) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த அவர், புகழேந்திக்கு தக்க பாடம் புகட்ட நினைத்துள்ளார். அதோடு, இந்த விவகாரத்தை தனது நண்பர்களிடமும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், புகழேந்தி வழக்கம்போல் அந்த பகுதிக்கு டெலிவரி செய்ய வந்துள்ள விவரத்தை சிபி சக்கரவர்த்தி தெரிந்துகொண்டுள்ளார்.

உடனடியாக தனது நண்பர்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு, புகழேந்தி சென்ற வேனை பின்தொடர்ந்து சென்றுள்ளார். தொடர்ந்து, ஆள் நடமாட்டமில்லாத பகுதி அருகே வேன் சென்றபோது, வேனை மறித்து புகழேந்தியை தங்களது காரில் கடத்திச் சென்றுள்ளார்.

அங்கு தனது பழைய வீட்டிற்கு அவரை அழைத்துச்சென்று கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அதோடு, இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த புகழேந்தி, டெலிவரி சென்ற இடத்தில் கீழே விழுந்துவிட்டதாக கூறி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். தொடர்ந்து, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

5 பேர் சராரியாக தாக்கியதில் அவருக்கு உள் காயங்கள் அதிகமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் புகழேந்தியிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது, அவர் டெலிவரி செய்ய சென்ற இடத்தில் 5 பேர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக புகழேந்தியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த உறவினர்கள், நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், புகழேந்தியடம் நடந்த விவரத்தை கேட்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி புகழேந்தி பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட சிபிசக்கரவர்த்தி உள்ளிட்ட அவரது ஐந்து நண்பர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN