Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 டிசம்பர் (ஹி.ச.)
'இண்டிகோ' விமான சேவை நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 900 கோடி ரூபாய் சுங்க வரியை ரத்து செய்யக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இண்டிகோ விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை பழுது பார்ப்பதற்காக, வெளிநாட்டுக்கு அனுப்பி மீண்டும் நம் நாட்டுக்கு இறக்குமதி செய்தோம். அதற்கான அடிப்படை வரி செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பழுதுபார்த்த பொருட்களை புதிய பொருளாக கருதி மீண்டும் சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. மறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இப்படி மீண்டும் சுங்கவரி வசூலிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
எங்கள் நிறுவனத்திடம், 900 கோடி ரூபாய் சுங்க வரி செலுத்தும்படி அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். இது தொடர்பாக, சுங்கத்துறை முதன்மை கமிஷனர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, எங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா சிங், ஷாகில் ஜெயின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், நீதிபதி ஷாஹில் ஜெயினின் மகன், இண்டிகோ நிறுவனத்தில் விமானியாக பணியாற்றுவதால், அவர் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது சரியாக இருக்காது எனக்கூறி விலகிக் கொண்டார்.
இதையடுத்து வேறு ஒரு புதிய அமர்வில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM