Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 13 டிசம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 9-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
இந்த நிலையில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த 7 மாவட்டங்களில் 3 மாநகராட்சிகளில் 188 வார்டுகளுக்கும், 7 மாவட்ட ஊராட்சிகளில் 182 வார்டுகளுக்கும், 47 நகராட்சிகளில் 1,829 வார்டுகளுக்கும், 77 ஊராட்சி ஒன்றியங்களில் 1,177 வார்டுகளுக்கும், 470 கிராம ஊராட்சிகளில் 9,015 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 391 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் மொத்தம் 38,994 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 18,974 பேர் ஆண்கள், 20,020 பேர் பெண்கள் ஆவர்.
2-ம் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சத்து 37 ஆயிரத்து 176 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். இதற்காக 18,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் சிரைக்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
கேரளாவில் நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 75.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை 6.30 மணி நிலவரப்படி, திருச்சூர் மாவட்டத்தில் 71.88 சதவீதம், பாலக்காடு மாவட்டத்தில் 75.60 சதவீதம், மலப்புரம் மாவட்டத்தில் 76.85 சதவீதம், கோழிக்கோடு மாவட்டத்தில் 76.47 சதவீதம், வயநாடு மாவட்டத்தில் 77.34 சதவீதம், கண்ணூர் மாவட்டத்தில் 75.73 சதவீதம், காசர்கோடு மாவட்டத்தில் 74.03 சதவீதம் வாக்குப்பதிவானது.
வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது.
இதனையொட்டி வாக்குகள் எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM