மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு - ரூ.75 ஆயிரம் பறிமுதல்
வேலூர், 13 டிசம்பர் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காந்தி நகரில் மோட்டார் வாகன ஆய்வாளர் (RTO Break Inspector) அலுவலகம் உள்ளது. இங்கு ஆய்வாளராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதிக்கு உட்பட்ட வாகனங்களை ஆய்வு செய்
Kudiyatham RTO Raid


வேலூர், 13 டிசம்பர் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காந்தி நகரில் மோட்டார் வாகன ஆய்வாளர் (RTO Break Inspector) அலுவலகம் உள்ளது. இங்கு ஆய்வாளராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த பகுதிக்கு உட்பட்ட வாகனங்களை ஆய்வு செய்து, விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், செந்தில் வாகன ஆய்வு பணிக்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை வேலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்பு காவல் துறையினர் நேற்று மாலை குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் மூன்று மணி நேரம் நடத்திய தீவிர சோதனையில், கணக்கில் வராத ரூ.75 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கூறுகையில், “குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இந்த சோதனை மேற்கொண்டோம். அப்போது அலுவலகப் பதிவுகளில் இடம் பெறாத ரூ.75,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பணம் எங்கிருந்து வந்தது? யார் வைத்தது? எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணை முடிந்ததும் தொடர்புடையவர்களிடம் கூடுதல் விளக்கங்கள் பெறப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN