தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி பயணம்..!
சென்னை, 13 டிசம்பர் (ஹி. ச.) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று சனிக்கிழமை டெல்லி செல்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல்
நயினார் நாகேந்திரன்


சென்னை, 13 டிசம்பர் (ஹி. ச.)

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று சனிக்கிழமை டெல்லி செல்கிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார்.

இந்நிலையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ள நயினார் நாகேந்திரன் முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார்.

டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தசூழலில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரையும் சேர்க்கக் கூடாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜக தேசியத் தலைவர்களான ஜே.பி. நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்திக்கும் நயினார் நாகேந்திரன், இதுகுறித்து ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam