Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 13 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம், அம்பலவாண்புரம், நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை, பாலமுருகன் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சத்தம் கேட்டு எழுந்து வந்த பாலமுருகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முன்பே, அந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இந்தச் சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறே இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
முன்விரோதத்தின் காரணமாகவே இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களைக் கைது செய்யும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்று பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. சமீப நாட்களில், அம்பாசமுத்திரம் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெவ்வேறு சம்பவங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் தனிமனித மோதல்கள் மற்றும் முன்விரோதத்தின் காரணமாகவே நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறையினர் அதிதீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN