Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 13 டிசம்பர் (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள கட்சிகளிடம் சேவை அரசியலோ, செயல் அரசியலோ கிடையாது. இந்த கட்சிகள் தேர்தல் அரசியல், கட்சி அரசியலையே மேற்கொள்வர். மக்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள். மாதம் ரூ. ஆயிரம் சம்பாதிக்க முடியாத நிலைக்கு என் மக்களை நிறுத்திவிட்டு, பெண்ணியம் குறித்து திமுகவினர் பேசுவதில் என்ன நியாயம் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதும், பிப்ரவரி மாதத்தில் லேப்டாப் வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிடுகிறது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ரூ. ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்டவற்றை கொடுத்துவிட்டு பின்புறமாக அதற்கான பணத்தை திமுக அரசு பிடுங்கி விடுகிறது. திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ள வரும் நிலையில், மூன்று முறை நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கடந்த முறை சென்றுள்ளார்.
தமிழகத்தில் எந்த அமைச்சரின் துறையில் ஊழல் இல்லாமல் உள்ளது. இவ்வளவு ஆண்டுகள் முருகன் மீது பக்தி வராத பாஜகவுக்கு தற்போது எதற்காக பக்தி பொங்கி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் மூலம் அரசியல் செய்ய முடியாததால், தமிழகத்தில் முருகரை வைத்து பாஜக அரசியல் செய்ய முயல்கிறது. ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் பாரதி குறித்து பேசுவதற்கு அழைத்ததால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினேன்.
திமுக சார்பில் பாரதி குறித்து கூட்டம் நடைபெற்றாலும், அந்த கூட்டத்திலும் நான் பங்கேற்று பாரதி குறித்து பேசுவேன். இந்தியா முழுவதும் ஐந்து ஆண்டுகால ஆட்சியை நிலை நிறுத்தி தனது கிளையை பரப்புவதற்கு உதவியாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறி இருந்தார். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது குறித்து பேசாமல், அங்கு நான் என்ன பேசினேன் என்பதை திமுகவினர் பேச வேண்டும்.
வ. உ. சிதம்பரனார், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது கேட்காமல், கருணாநிதி பாரத ரத்னா விருதை திமுக அரசு கேட்டு வருகிறது. பாஜகவுக்கு திமுக சதி திட்டம் தீட்டி கொடுக்கிறது. தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றை தட்டி கழிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்று சீமான் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN