Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும் டித்வா புயலால் சேதமான சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ஒரு மண்டலத்துக்கு தலா ரூ.89 லட்சம் வீதம் மொத்தம் 15 மண்டலங்களுக்கு ரூ.13.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக சாலை பணிகள் மறுசீரமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் கண்டறிந்து சீரமைக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் முக்கிய சாலைகள் எல்லாம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரமைக்கப்பட்டது. தற்போது மழை தொடங்கி விட்டதால் புதிதாக போடப்படும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் எல்லாம் மழை காலம் முடிந்த உடன் தொடங்கப்படும். இதற்கிடையே டித்வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையால் சென்னையில் சாலைகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளது.
மழைக்காலங்களில் சாலைகள் சேதமடைவது இயல்பு தான். ஆனால், அந்த சேதங்களை உடனடியாக சரிசெய்வது மாநகராட்சியின் கடமையாகும். அதன் அடிப்படையில் சேதமடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கு ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன இயந்திரங்களை பயன்படுத்த சாலை சீரமைப்பு பணிகள் விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
Hindusthan Samachar / vidya.b