மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து டிச.17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு
சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.) மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும் டிச.17 அன்று மதுரையில் கண்டன ஆர்ப்பாட்
மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து டிச.17 ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு


மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து டிச.17 ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு


மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து டிச.17 ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)

மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும் டிச.17 அன்று மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய திட்டங்களும் ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. குறிப்பாக, மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முன்மொழிவைக்கூட இந்த திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை.

வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீத வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டணம், குப்பை வரி ஆகியவற்றின் உயர்வால், மதுரை மாநகராட்சியின் வரி வருவாய் பலமடங்கு உயர்ந்தும், திமுக ஆட்சியில் மதுரை மாநகரில் அனைத்து வட்டங்களிலும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன; சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.

மதுரை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அதிமுகவால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை மனதில் வைத்து, முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் இத்திட்டத்தை அவசர கதியில் தொடங்கி வைத்தார்.

24 மணி நேரமும் மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை, அவசர கதியில் திமுக அரசின் முதல்வர் தொடங்கி வைத்ததால், மதுரை மாநகர மக்களுக்கு, நாள் முழுவதும் குடிநீர் வழங்குவதற்கு பதில், பழையபடி குறிப்பிட்ட நேரங்களுக்கே குடிநீர் வழங்கப்படுகிறது. மதுரை மாநகர் முழுவதும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை.

மேலும், திமுகவை சேர்ந்த மதுரை மாநகராட்சி மேயர், நிலைக் குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, முறைகேடான வரி விதிப்பின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, திமுக அரசின் அதிகாரிகளே கண்டறிந்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மேயரும், மண்டலக் குழுத் தலைவர்கள் சிலரும் ராஜினாமா செய்ததைத் தவிர, இந்த ஊழலில் திளைத்த மற்றவர்கள் மீது, இதுவரை இந்த திமுக அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவே, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும்; குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை புதுப்பிக்காத, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்காத மாநகரட்சி நிர்வாகத்தையும்; இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசையும் கண்டித்து, அதிமுக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 17.12.2025 புதன் கிழமை காலை 10 மணியளவில், பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ, தலைமையிலும்; அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான வி.வி ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் முன்னிலையிலும் நடைபெறும்.

அனைவரும் பெருத்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b