Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.)
எய்ட்ஸ் நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித நோய் எதிர்ப்பு குறைபாட்டின் உச்சகட்டமாக விளங்குவது எய்ட்ஸ் என்னும் கொடிய நோய். இது உடலை அதன் சொந்த பாதுகாப்பு அமைப்பிலிருந்து பலவீனப்படுத்துவதால், மனிதர்களுக்கான எதிர்ப்பு சக்தி திறன் குறைகிறது.
இந்த நோய் பரவுவதைத் கட்டுப்படுத்தவும். தடுக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவினைத் தரும் பொருட்டும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களுக்கு சேவை செய்யும் பணியை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பணிபுரியும் 2,500 ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் அவர்கள் ஊழியர் நலச் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கி வருகிறது என்றும், தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி ஏதும் வழங்கப்படவில்லை என்றும், இந்தத் திட்டம் ஐந்தாவது காலகட்டத்தில் இருக்கிறது என்றும், இதன் காலம் 31-03-2026 உடன் முடிவடைகிறது என்றும், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இந்தத் திட்டம் செயல்படும் வரை மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், இவர்களின் பணியை நிரந்தரப்படுத்தவோ, முறைப்படுத்தவோ முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எய்ட்ஸ் நோயால் ஒன்றரை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் செயல்படும் வரை மட்டுமே பணியாற்ற முடியும் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
திட்ட இயக்குநரின் இந்தப் பதில் தி.மு.க. அரசின் தொழிலாளர்விரோதப் போக்கினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. திட்ட இயக்குநரின் பதிலைப் பார்க்கும்போது, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்திற்கு தி.மு.க. அரசு விரைவில் மூடுவிழா நடத்தி விடுமோ என்ற அச்சம் எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டாலும், இந்தச் சங்கத்தை தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டிய கடமையும். அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. ஊழியர்களின் பணி நிரந்தரத்திற்கான கூடுதல் செலவை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற எதிர்மறையான பதிலைத் தெரிவித்து பொறுப்பை தட்டிக் கழிக்கும் தி.மு.க. அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான பணி நிரந்தரக் கோரிக்கையினை 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே நிறைவேற்றித் தர மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam